சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக, படத்தின் கதாநாயகி பார்வதி திருவேத்து பேசுகையில், “நான் இன்னும் கங்கம்மாள் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வரவில்லை. இன்னும் என்னை கங்கம்மாளாகவே வாழ்ந்து வருகின்றேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு நன்றி. தங்கலான் போன்ற உலகத்தை உருவாக்கியதற்கு நன்றி. இயக்குநர் பா. ரஞ்சித்துடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என பல நாள் ஆசை. இந்தப் படத்தின் மூலம் அது சாத்தியமாகியுள்ளது. இது போன்ற படம் சிறப்பாக வரவேண்டும் என்றால், இந்தப் படத்தில் நடிக்கும் அனைவரது ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். அப்படி இந்த படம் முழுவதும் மிகவும் பொருமையுடன் இணைந்து நடித்த நடிகர் சீயான் விக்ரம்க்கு நன்றி. நீங்கள் இன்னும் தங்கலான் படத்தினைப் பார்க்க தயாராகவே இல்லை. இந்த படத்திற்காக விக்ரம் அவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளார்.
படப்பிடிப்புக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளுக்கு ரஞ்சித்தின் அம்மாவும் சகோதரியும் வருவார்கள். ரஞ்சித்தின் அம்மா உணவு கொண்டு வருவதுடன் எனக்கு உணவு ஊட்டி விடுவார். அங்கிருந்து இந்த படம் தொடங்கியது. என்னால் இப்போதுவரை கங்கம்மாள் கதாபாத்திரத்தில் இருந்து வெளிவரவில்லை. படத்தின் உதவி இயக்குநர்கள் இல்லை என்றால், என்னால் கட்டாயம், கங்கம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியாது.
சினிமா என்பது பொழுது போக்குதான். சினிமா என்பது ப்ளாக் பஸ்டர்தான். ஆனால் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. தங்கலான் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் ரிலீஸ் ஆவது எதேர்ச்சியாக நடப்பது இல்லை. நாம் மிகவும் சுலபமாக சுதந்திரம், ஆதிக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்தி விடுகின்றோம். ஏற்றத்தாழ்வு ஏன் இருக்கின்றது. அதை நாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அதுதான் அரசியல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கலை எப்போது அரசியலுக்கானது. இயக்குநர் ரஞ்சித் கலை வழியே ஒரு ராணுவத்தை வழி நடத்துகின்றார். அதில் நான் ஒரு வீராங்கனையாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன்” என பேசினார்.