உலக அளவில் பிரபலமான இங்கிலாந்து பாடகர் மற்றும் இசையமைப்பாளர் எட் ஷீரன், பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் அவர் நடத்திய பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் அதில் கலந்துகொண்டனர். இதன் பிறகு, இந்தியாவில் எட்ஷீரனின் அடுத்த நிகழ்ச்சி எப்போது? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அதன்படி, கடந்த வாரம் முதல் இந்தியாவின் ஆறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் சுற்றுப் பயணத்தை எட் ஷீரன் தொடங்கினார். முதற்கட்டமாக பூனேவில் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, ரஹ்மான் மற்றும் அவரது மகன் ஏ.ஆர்.அமீனை சந்தித்து பேசிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மற்றொரு புகைப்படத்தில் ரஹ்மான் இசையமைக்கும் போது, எட் ஷீரன் அதை படம்பிடிக்கும் காட்சி அதிக கவனம் பெற்றது. அதோடு, எட் ஷீரன் குழுவும் சென்னையில் முகாமிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.