அஜித்தின் கார் ரேஸ் அணி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று வருவதால், இன்னும் சில காலம் கார் ரேஸில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் என உறுதியற்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அஜித்தின் ரேஸிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025ம் ஆண்டின் ரேசிங் பயணம் ஆர்வம், பொறுமை மற்றும் முன்னேற்றத்தின் பாதையாக அமைந்தது. இது வெறும் போட்டி அல்ல, கற்றுக்கொள்வதற்கான ஒரு பயணம். வெற்றிகளும், தோல்விகளும், சவால்களும் கலந்து இருந்த இந்த அனுபவம் எங்களை உலக மேடைகளில் வெளிப்படுத்தியது,” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும், “துபாயின் வெப்பம் முதல் ஐரோப்பாவின் பனிவரை ஒவ்வொரு போட்டியும் எங்கள் அணியை வலுப்படுத்தியது. ஆர்வமும் அடக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த பயணம் நிரூபித்தது. ஆசியா மற்றும் ஐரோப்பா என இரண்டு கண்டங்களில் மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்றோம். ஒரு இந்திய அணி இத்தனை போட்டிகளில் பங்கேற்றது என்பதே ஒரு புதிய சாதனை.
இந்த பயணத்தில் தோல்விகள், தொழில்நுட்ப கோளாறுகள், பருவ நிலை மாற்றங்கள் போன்ற பல சவால்கள் இருந்தன. வீரர்கள், மெக்கானிக்குகள், பொறியாளர்கள் அனைவரும் இணைந்து அவற்றை வெற்றிகரமாக சமாளித்தனர். இந்த ஆண்டின் அனுபவத்தை முழுமையாகச் சொல்ல, ஒரு புத்தகமே எழுத வேண்டிய அளவு நினைவுகள் நிறைந்துள்ளது. இந்த அனுபவம் ஒரு தொடக்கமே. இனி தொடர்ந்து சோதனைகள், திட்டமிடல்கள் செய்து, சர்வதேச ரேசிங் துறையில் மேலும் விரிவாக பயணிக்க கவனம் செலுத்துகிறோம். இந்த பயணத்தில் கற்றவற்றை வரவிருக்கும் ஆண்டுகளில் சிறப்பாகப் பயன்படுத்துவோம்,” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.