வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தை ₹1000 கோடி வசூல் கிளப்பில் இணைக்க வேண்டும் என்பதற்காக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் உள்ளிட்ட பல மொழி நடிகர்களையும் இதில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்த காரணத்தால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கூலி படத்தை அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிடும் திட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதுவரை அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த தேதியில் வேறு எந்த திரைப்படமும் திரைக்கு வரவில்லை என்பதால் கூலி படம் சிங்கிளாக வெளிவரும் வாய்ப்பு அதிகம்.