தமிழ் சினிமாவில் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் அறிமுகமானது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இலங்கை தமிழரான சுபாஷ்கரன், இங்கிலாந்து சென்று தனது கடுமையான முயற்சியால் பெரிய தொழிலதிபராக வளர்ந்தவர். தமிழ் சினிமாவைப் பற்றிய தனது ஆர்வத்தால், திரையுலகில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதுடன், பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்துள்ளார்.
எனினும், அண்மையில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மலையாள சினிமாவில் மோகன்லால் நடித்து பிருத்விராஜ் இயக்கிய எல் 2 எம்புரான் படத்தை தயாரிக்க ஆரம்பித்த லைக்கா, கடைசி நேரத்தில் அப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, லைக்கா தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது, லைக்கா புரொடக்ஷன்ஸ் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தையே தயாரித்து வருகிறது. இதைத் தவிர, வேறு எந்த புதிய படத்திலும் அவர்கள் ஈடுபடவில்லை.மேலும், லைக்கா நிறுவனம் தயாரித்து முடித்ததாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் படத்தின் நிலை என்னவென்று எந்த தகவலும் கிடைக்கவில்லை. அறிமுக இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்த இந்தப் படம், கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிடப்படும் என டீசர் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை. வெளியீட்டிற்குத் தயாராக உள்ள இப்படம் விரைவில் வெளியாகுமா, அல்லது நிலுவையில் அடங்கிவிடுமா என்பது குறித்த கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.