‘தி கோட்’ படத்தைத் தொடர்ந்து, எச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ என்ற படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில், இது ஒரு கமர்சியல் படம் என மட்டுமே படக்குழு கூறியிருந்த நிலையில், ‘ஜனநாயகன்’ என்ற டைட்டில் வெளியான பின், இது ஒரு அரசியல் படம் என்பதைத் தெளிவாக அறிவித்தனர். இத்துடன், இப்படம் அரசியல் படமாக இருந்தாலும், அது அனைத்து தரப்பு மக்களும் பார்க்கக்கூடிய வகையில் கதையோட்டம் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. குறிப்பாக, யாரையும் நேரடியாக தாக்கும் வகையில் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்று இயக்குனருக்கு விஜய் ஒரு உத்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், சமூக நீதி பற்றி பேசும் இந்த படத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் மக்களுக்கு உணர்த்தக்கூடிய புரட்சிகரமான வேடத்தில் விஜய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், விஜய்யின் அரசியல் பயணத்திற்கான ஒரு படமாகவே இந்த ‘ஜனநாயகன்’ உருவாகி இருப்பது தெரிகிறது.