தமிழில் ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நந்திதா ஸ்வேதா, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘அசுரவதம்’, ‘கபடதாரி’, ‘ரத்தம்’, ‘ரணம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துவரும் அவர் தற்போது தமிழ்-தெலுங்கு இருமொழி படங்களிலும், புதிய வலைத்தொடர்களிலும் நடித்து வருகிறார்.

தனது திரைப்பயணத்தைப் பற்றி நந்திதா கூறியதாவது “சினிமா மீது எனக்கு சிறுவயது முதலே பெரும் பற்று. என்னுடைய ஆசை என்ன என்று யாராவது கேட்டால் தயக்கமின்றி நடிகையாக வேண்டும் என்று சொல்வேன். ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் விஜயகுமார் என்னை சந்தித்து, ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதுவே என் சினிமா வாழ்க்கையின் தொடக்கம்.சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை. ஒரு படம் ஹிட்டானதாலே பெரிய நட்சத்திரம் ஆகிவிட்டோம் என எண்ணக்கூடாது அதுதான் மிகப்பெரிய தவறு. ஒரே படத்தில் யாரும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியாது; வெற்றி, பெயர், சம்பளம் இவை அனைத்தும் படிப்படியாகவே கிடைக்கும்.
முதல் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுத்து கல்லூரியில் படித்தேன். அதன்பிறகு நடித்தது ‘அட்டகத்தி’அது எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அந்தப் படம் எனக்கு அடையாளத்தை தந்தது. பின்னர் ‘எதிர்நீச்சல்’, ‘உள்குத்து’ படங்களில் நடிக்கும்போது பலர் வேண்டாம் என்றாலும் நான் நம்பி நடித்தேன்; இரண்டும் ஹிட்டானது. சில படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சினிமா என்பது வெற்றி, தோல்வி கலந்த உலகம்.
இந்தத் துறையில் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் பொறுமை. நான் மறுத்து விட்ட சில படங்கள் பின்னர் வெற்றி பெற்றன, ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. நடந்தது நடந்தே விட்டது. அதில் சிக்கி மனச்சோர்வடைவது முட்டாள்தனம். எப்போதும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டேன் என்று எனக்கு முன்பே முடிவு எதுவும் இல்லை; கதைக்கு தேவையான விதத்தில் எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார்,” என தெரிவித்துள்ளார்.

