அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். இந்த படத்தில் அவர் வாத்தியார் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கிறார். இன்று படம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, அரசுன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் எந்த படத்தில் நடிக்க கூப்பிட்டாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு செல்ல வேண்டும் என்கிற முடிவில் இருந்தேன். அப்போதுதான் ‘விடுதலை’ படம் வந்தது. முதல் பாகத்தில் நான் இல்லையே என்ற வருத்தத்தில் இருந்தபோது வெற்றிமாறன் போன் செய்து படத்தின் நாயகியே நீங்கதான் என்று கூறி கதை சொல்ல ஆரம்பித்தார். சார் கதை எல்லாம் சொல்ல வேண்டாம், எங்க வரவேண்டும், எப்போது வரவேண்டும் என்று மட்டும்தான் சொன்னேன்.
வெற்றி எந்தப் படம் எடுத்தாலும் அதன் தீவிரத்தில் அது முக்கியமான படமாக மாறி விடுகிறது. படத்தில் சொல்ல வருகிற விஷயம், அதன் அரசியல் எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். சொல்லப்போனால் வாத்தியாரான விஜய் சேதுபதியின் கதை, அவரது வாழ்க்கை எப்படித் தொடங்கியது, அவர் எப்படி வாத்தியாராக மாறினார், அவர் புரிந்துகொண்டது என்ன என்ற நீங்கள் பார்த்த முதல் பாகத்தின் தொடர்ச்சிதான். மக்களோடு மக்களாக இருந்து உழைத்துக் கொண்டிருக்கும் தலைவரின் கதைதான். இது மாதிரி வெளியே தெரிய வராமல் இருக்கிற தலைவர்களின் தெளிவான கதையை வெற்றி சொல்லியிருக்கிறார். நாம் யோசிக்காத பல விஷயங்களை யோசிக்க வைத்திருக்கிறார். பல விஷயங்கள் நம் இருப்பைக் கேள்வி கேட்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது எனது முக்கியமான அனுபவம்.
விஜய் சேதுபதியுடன் நடிக்க மூன்று வாய்ப்புகள் வந்தன. அவை கைகூடவில்லை. எனக்கு ரொம்ப வருஷமாக அவர் கூட நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. அது இப்போதுதான் நடந்திருக்கிறது. சிறந்த நடிகர் என்று சொல்லப்படுவதன் அர்த்தம், நேரில் அவர் நடித்துப் பார்க்கும்போது இன்னும் புரிந்தது.அதேமாதிரி வெற்றிமாறன் சார் வாத்தியார் மாதிரியான கதாபாத்திரங்களை எழுதிக் கொண்டு வருவதெல்லாம் ரொம்ப கஷ்டமான காரியம். சொல்லவும், கேட்கவும் யோசிக்கவும் இந்தப் படத்தில் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. ஒரு வாத்தியார் கதையை வைத்துக் கொண்டு நம் எல்லோருக்குமான விடுதலையைக் கொண்டு வந்து விடுகிறார் வெற்றி. அவர் படத்தில் இரண்டாவது தடவையும் நடித்தது என் பாக்கியம். என்றார்.