மோகன்லால் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘துடரும்’ திரைப்படத்தை இயக்கியவர் தருண் மூர்த்தி. இதைத் தொடர்ந்து, அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அடுத்ததாக அவர் இயக்கும் திரைப்படம் ‘டார்பிடோ’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்லென், அர்ஜுன் தாஸ் மற்றும் கணபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் நஸ்லென் நடித்த ‘ஆலப்புழா ஜிம்கானா’ திரைப்படம் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எனினும், இந்த படம் எந்தவிதமான கதைக்களத்தில் உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
‘டார்பிடோ’ என்ற வார்த்தைக்கு கடலுக்கடியில் செல்லும் தானியங்கி ஏவுகணை எனும் அர்த்தம் உள்ளது. இந்த படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித் கவனிக்கிறார். இசையமைப்பை சுஷின் ஷ்யாம் மேற்கொள்கிறார். இப்படம் தொடர்பான மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.