மலையாள திரைப்பட நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு வெளிவந்த ஹேமா கமிஷன் அறிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள், பின்னர் தலைவர் மோகன்லால் ராஜினாமா செய்தது போன்ற பரபரப்புகளின் நடுவே இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் முறையாக நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்டு வெற்றி பெற்று, சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எதிராக போட்டியிட்ட பாட்ஷா வில்லன் நடிகர் தேவன் தோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில் நடிகை ஊர்வசிக்கு, “நீங்கள் ஏன் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தற்போது இருக்கும் சூழலில், சங்க நிர்வாகம் தங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நிலைப்பாடுகளுக்கும் உறுதியான குரல் கொடுக்க முடியும் என எனக்குப் பெரிதும் நம்பிக்கை இல்லை. அதனால் தான் நான் போட்டியிடவில்லை. ஒருநாள் அந்த நம்பிக்கை ஏற்பட்டால், நிச்சயமாக நான் போட்டியிடுவேன்” என தெரிவித்தார்.
மேலும், நடிகர் சங்கத்திலிருந்து விலகிச் சென்ற பெண்கள், குறிப்பாக பெண்கள் நல அமைப்பில் உள்ள முன்னணி நடிகைகள், இப்போது ஒரு பெண் தலைவராக வந்தாலும் திரும்ப வருவது குறித்து பேசவில்லையே என்ற கேள்விக்கு, “நான் தலைவராக இருந்திருந்தால், அவர்கள் திரும்ப சங்கத்தில் இணைய வேண்டும் என்று நிச்சயம் அழைப்பு விடுத்திருப்பேன்” என்று ஊர்வசி தெரிவித்துள்ளார்.