ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ஹிந்திப் படமான ‘வார் 2’-இல் தனது நடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் ஹிந்தி சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இன்று அவர் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வார் 2’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக உள்ள ஹிருத்திக் ரோஷன் நடித்த படம் ‘வார்’ 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் டைகர் ஷ்ராஃப் மற்றும் வாணி கபூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து, யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்பை யூனிவர்ஸில் அடுத்ததாக தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் ‘வார் 2’. இதில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் தலிவாலாக தனது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘பிரம்மாஸ்திரா’ படத்தை இயக்கிய அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.