‘சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில், நடிகர் விக்ரம் தனது 62வது படமாக ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரியா ஷிபு தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரை நகரத்தை கதைக்களமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி வெளியான ‘வீர தீர சூரன்’ படத்தின் திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது.
திரைப்படம் வெளியானது ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், இது ₹37 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், இயக்குநர் அருண் குமார் கலந்து கொண்டார். அப்போது, திரையரங்குகளில் மொபைல் பயன்பாடு குறித்து அவர் தனது கருத்துகளை பகிர்ந்தார்.அவர் கூறியதாவது, திரையரங்கில் படம் பார்க்கும்போது, மொபைலை எடுத்து புகைப்படம் எடுப்பவர்களைப் பார்த்தால் கோபமாக வருகிறது. திரைப்படம் தொடங்கிய பிறகு, படக் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து ஸ்டேட்டஸ் வைப்பது, இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, படம் தொடங்கிய பிறகு டார்ச் அடித்துக்கொண்டு சீட்டை தேடுவது போன்ற செயல்கள் மிகவும் தொந்தரவு அளிக்கின்றன. மக்கள் திரைப்படத்தை முழுமையாக கவனித்தால்தான் கதையின் ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற இடையூறுகள், படத்தின் காட்சிகளை அனுபவிப்பதற்கு ஒரு தடையாக மாறுகின்றன.” என அவர் தெரிவித்துள்ளார்.