தமிழ் சினிமாவில் 90களிலும் 2000களின் ஆரம்பத்திலும் ஆக்ஷன் கிங் என பெயர் பெற்றவர் அர்ஜூன். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிதாக உருவாகி வரும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிரதீப் ரங்கநாதனின் அசிஸ்டென்ட் டைரக்டர் சுபாஷ் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ‘விருமாண்டி’ அபிராமி நடிக்கிறார். இவர்களுடைய மகளாக ‘ஸ்டார்’ படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மேலும் விவேக் பிரசன்னா, ஜான் கொக்கென், அர்ஜூன் சிதம்பரம், பவன், திலீபன், வினோத் சாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ‘கே.ஜி.எப்’ இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்.
படம் அறிவிக்கப்பட்டபோது இது ஒரு பேமிலி டிராமா என பலர் கூறினார்கள். ஆனால் இதில் அப்பா, மகள் சென்டிமென்ட் கதை மட்டும் இல்லாமல் சுமார் ஆறு ஆக்ஷன் சீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது என தகவல்.