தமிழகத்தைச் சேர்ந்த பத்மநாபன் தயாளன் கன்னடத் திரைப்படத் துறையில் முன்னணி இயக்குனராக திகழ்கிறார். சமீபத்தில் அவருக்கு கர்நாடக அரசின் விருது வழங்கப்பட்டது. தற்போது அவர் இயக்கத்தில் “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற புதிய படம் உருவாகவுள்ளது. 1950களில் பத்திரிகையாளர் லக்ஷ்மிகாந்தன் கொலை செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது இப்படம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.வி. சபரீஷ் மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்க, தர்புகா சிவா இசையமைக்கிறார். எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.
,இயக்குனர் தயாள் பத்மநாபன் இப்படம் குறித்து பேசுகையில், இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை மட்டுமல்ல; அதன் பின்னணியில் இருந்த அரசியல், சினிமா மற்றும் ஊடக வலையமைப்பை வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு ஆழமான படைப்பு. இது ஒரு சாதாரண குற்றப் படம் அல்ல; தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மை நிகழ்வை கலைநயத்துடன் வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த படைப்பாக இருக்கும் என்றார்.

