இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் “ஸ்டோன் பெஞ்ச்” தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள “பெருசு” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சமீபத்திய பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது,”ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16வது திரைப்படம் இது. பொதுவாக, இந்தியாவில் அடல்ட் திரைப்படங்கள் எப்போதும் குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் முன்னிறுத்தி உருவாக்கப்படும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதனைச் சுவாரஸ்யமாகவும், வெறுப்பை ஏற்படுத்தாத வகையிலும் உருவாக்குவார்கள். ‘பெருசு’ திரைப்படம், இந்த அணுகுமுறையை சிறப்பாக கொண்டுள்ளது. அடல்ட் திரைப்படத்திற்கே ஒரு புதிய கோணத்தை கொடுத்திருக்கிறோம் என்றார்.

பின்னர் இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்பராஜ் பேசுகையில், “மற்றவர்களைச் சிரிக்க வைப்பது மிகவும் கடினமான விஷயம். ஒரு கதையின் மிக முக்கியமான பாகம் அதில் நடிக்கும் நடிகர்கள்தான். நான், வைபவ் மற்றும் அவரது அண்ணன் இணைந்து நடித்தால் சிறப்பாக அமையும் என கருதினேன். 18 வயதிற்கு மேற்பட்டோர் குடும்பத்துடன் பார்த்தாலும் பிரச்சனை இருக்காது. இப்படத்தில் நகைச்சுவைக்கும், உணர்வுப் பூர்வமான தருணங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு கதை இது என்று கூறினார்.