2023ஆம் ஆண்டு வெளியான ‘டாடா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கணேஷ் கே. பாபு. கவின்–அபர்ணா தாஸ் நடித்த அந்த படம் மிகப்பெரிய வரவேற்பும் வெற்றியும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, ரவி மோகன் நடிப்பில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான செல்வராகவனை கணேஷ் கே. பாபு நேரில் சந்தித்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், சினிமாவைப் பற்றிய எனது பார்வையை ‘புதுப்பேட்டை’ படம் முழுமையாக மாற்றியது. அந்த திரைப்படம் தான் ‘டாடா’ மற்றும் ‘கராத்தே பாபு’ போன்ற படங்களை நான் இயக்குவதற்கு ஊக்கம் தந்தது. நான் சினிமா உலகில் காலடி எடுக்க முக்கிய காரணங்களில் ஒருவர் செல்வராகவனே. இன்று அவரை நேரில் சந்தித்ததால், வாழ்க்கை நிறைவடைந்தது போல உணர்கிறேன் என்று மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.

