மலையாள திரையுலகின் முன்னணி இளம் நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி “மார்கோ” திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க வன்முறையும் அதிரடியான ஏழு சண்டைக் காட்சிகளும் நிறைந்த இந்த படம், ஏ சான்றிதழ் பெற்றதாக இருந்தாலும், கேரளாவில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இந்த படம் ஒவ்வொரு மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படம் ஹிந்தியிலும் வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில், வெறும் 89 தியேட்டர்களில் மட்டுமே இந்த படம் வெளியானது. மேலும், வருண் தவான் நடித்த “பேபி ஜான்” படம் வெளியான பிறகு தியேட்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
ஆனால், “அனிமல்” திரைப்படத்தைப் போலவே “மார்கோ” திரைப்படமும் மிகவும் ஆக்ரோஷமானதாக இருக்கிறது எனும் தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால், தற்போது இந்த படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கை 350-க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. “பேபி ஜான்” படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததால், “மார்கோ” திரைப்படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிக்கக் காரணமாகி இருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.