நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றிய கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி, பல வருட இடைவெளிக்குப் பிறகு தக் லைப் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது.

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. இதனால், இந்தியன் 2 மற்றும் தக் லைப் ஆகிய இரு படங்களும் வெற்றி பெறாததால், அடுத்ததாக அவர் நடிக்கவுள்ள அன்பறிவின் படத்தின் கதைக்குள் சில மாற்றங்களைச் செய்ய கமல் ஆலோசனை வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில், தக் லைப் தோல்வி கமலை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கியதா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என் தந்தை சினிமாவில் வெற்றி, தோல்வி இரண்டையும் போதுமான அளவுக்கு அனுபவித்தவர். அதனால் இந்த தோல்வி அவரை பாதிக்கவில்லை. அவர் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வீடுகள் கட்டவோ, கார்கள் வாங்கவோ பயன்படுத்துவதில்லை. மீண்டும் அதையே சினிமாவுக்கே செலவிடுகிறார். அதனால் நம்பர் கேம், வசூல் என்ற விஷயங்கள் அவரை பாதிக்காது” என்று விளக்கம் அளித்தார்.