ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த மலையாள படம் திரிஷ்யம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து, மலையாள சினிமாவின் முதல் ₹50 கோடி வசூல் சாதனையை படைத்தது. இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியானபோதும் அதுவும் முதல் பாகத்தைப் போல் வரவேற்பைப் பெற்றது. நடிகர் மோகன்லால், கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியின் மகனின் உடலை போலீஸ் ஸ்டேஷனுக்குள், அதுவும் இன்ஸ்பெக்டர் அறையில் புதைத்துவிடும் கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்காக ஜீத்து ஜோசப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் சமீபத்திய பேட்டியில், முதலில் அவர் வேறு கிளைமாக்ஸை யோசித்ததாக கூறியுள்ளார். “முதலில் அந்த இளைஞனின் உடலை வேறு இடத்தில் புதைத்து விட்டு, அதற்குமேல் மோகன்லாலும், அந்த இளைஞனின் பெற்றோரும் உருக்கமான உரையாடலில் ஈடுபடுவது போல சித்தரிக்க நினைத்தேன். ஆனால் அது சுவாரஸ்யமில்லாமல் திணிக்கப்பட்டதாகத் தோன்றியது.
அப்போது நான் கேரள போலீஸுக்காக டாக்குமென்டரி எடுக்கையில், போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே உடலை புதைத்தால் என்னவாகும் என திடீரென தோன்றியது. அதற்குப் பிறகே படத்தின் கிளைமாக்ஸை மாற்றினேன்” என்றார் ஜீத்து ஜோசப்.