‘காந்தாரா’ படத்தில் இருக்கும் புகழ் பெற்ற பாடலான ‘வராஹ ரூபம்’ பாடலை ஒளி, ஒலிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை கோழிக்கோடு நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.
கன்னட நடிகரான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த படம் ‘காந்தாரா’. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வராஹ ரூபம்’ என்ற பாடல், கேரளாவை சேர்ந்த பிரபல ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக் குழுவின் ‘நவரசம்’ என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கோழிக்கோடு செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் அந்தப் பாடலை ‘காந்தாரா’ படத்தில் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து படத்திலும் அந்த இசை நீக்கப்பட்டு வேறொரு இசையுடன் பாடல் ஒலித்தது.
இப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த ‘வராஹ ரூபம்’ பாடல் காப்பி அடிக்கப்பட்டதற்கான உரிய ஆவணங்களை தய்க்குடம் பிரிட்ஜ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என்பதால் அந்தப் பாடலுக்கு விதிக்கப்பட்ட தடையை கோழிக்கோடு நீதிமன்றம் நீக்கியுள்ளதாம்.