‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி, அதன் பிறகு ஜீவி, கேர் ஆப் காதல், வனம், ஜோதி, பூமர், மெமரீஸ்ட், ஆலன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். தற்போது, அவர் நடித்து வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக வளர்ந்து வரும் தெலுங்குத் நடிகை அக்ஷிதா நடித்துவருகிறார். இவர்களுடன் பாலாஜி சக்திவேல், சிங்கம்புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு மற்றும் பலரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ‘வெப்’ மற்றும் ‘7/ஜி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹாரூன் இந்தப் படத்தையும் இயக்குகிறார். ஒளிப்பதிவை ஜான் ராபின்ஸ் கவனிக்கிறார். இசையை கே.வி. கிரண் அமைக்கிறார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஹாரூன் கூறியதாவது: “8 தோட்டாக்கள் திரைப்படத்திற்கு பிறகு, வெற்றி இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்ஷிதா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், ஏற்காடு, கொடைக்கானல், சேலம் மற்றும் கேரளா பகுதிகளில் நடைபெற உள்ளது. கதைக்களம் பல சஸ்பென்ஸ்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பரபரப்பான அனுபவமாக இருக்கும்” என தெரிவித்தார்.