கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தான் ‘ரெட்ரோ’. 1990களில் நடைபெறும் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில், பூஜா ஹெக்டே ஒரு கால்நடை மருத்துவரான ‘ருக்கு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த காலத்து குடும்ப பாங்கான தமிழ்ப் பெண்ணாக அவர் எடுத்துக்கொண்ட தோற்றமும், அவரது எளிமையான நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

ஆனால், சில தெலுங்கு ஊடகங்கள் மட்டும் பூஜாவை கடுமையாக விமர்சித்தன. அவரது தொடர்ச்சியான தோல்விப் படங்களில் இது இன்னொன்று என அவை குறிப்பிட்டன. இதற்குப் பின்னால் சில நடிகைகளின் மேனேஜர்கள் உள்ளனர் என பூஜாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டினர்.
இந்த சூழ்நிலையில், தனது ‘ருக்கு’ கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பை நினைத்து நன்றி தெரிவித்த பூஜா, “நன்றியுணர்வு பதிவு – ‘ருக்கு’வாக நான் நடித்ததற்கு எனக்கு அன்பும் பாராட்டும் தெரிவித்த அனைவருக்கும் என் சிறப்பு நன்றி. இது எனக்கு மிகப்பெரிய வரவேற்பாக அமைந்துள்ளது. தனிப்பட்ட செய்திகளை அனுப்பியவர்களுக்கும் நன்றி. என் ரசிகர்களின் அழகான பதிவுகளுக்கும், அனைத்து ‘கனிமா’ ரீல்களுக்கும் என் நன்றிகள். இதற்கான என் பதில் – அன்பு மற்றும் அன்பு மட்டுமே,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.