விஜய் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி திரைப்படம் படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தில் நடித்த பிறகு, விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதும், அவரது அரசியல் வருகையை முன்னிட்டு இப்படம் அரசியல் கலவையுடன் உருவாகியுள்ளது என பேசப்படுகிறது. இதன் காரணமாக, 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு இப்படத்தை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று (மார்ச் 24) மாலை 6 மணிக்கு, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், பட ரிலீசைத் தொடர்பான ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, 2026ம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9ம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ப்ரண்ட்ஸ்’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘காவலன்’, ‘நண்பன்’, ‘ஜில்லா’, ‘பைரவா’, ‘மாஸ்டர்’, ‘வாரிசு’ ஆகிய 14 திரைப்படங்களும் பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.