ரஜினிகாந்தின் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைத்த இந்த திரைப்படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனையை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மீண்டும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றது மற்றும் அந்நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. அதன் பிறகு தற்போது கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைத்தொடரில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்தக் காட்சிகளை தொடர்ந்து, படப்பிடிப்பு முடிந்த பிறகு ரஜினிகாந்த் தனது காரில் மெதுவாக சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் கூச்சலிட்டனர். அவர்களிடம் சிரித்தபடி கைகளை அசைத்து ரஜினிகாந்த் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில், ரஜினியை நேரில் பார்த்த ஒரு ரசிகர், வெறும் கையில் கற்பூரம் ஏந்தி அவரை வரவேற்ற சம்பவம் நடைபெற்றது. இந்த காட்சிகள் பதிவாகி தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.