தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் பா. ரஞ்சித். அவர் இயக்கிய அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, தங்கலான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் உள்ளிட்ட படங்கள் வெளியானது. தற்போது அவர் வேட்டுவம் என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். மேலும் பா. ரஞ்சித் நீலம் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பல அமைப்புகளையும் நடத்தி வருகிறார்.

2016ஆம் ஆண்டு ரஜினிகாந்த்–பா. ரஞ்சித் இணைப்பில் வெளியான கபாலி பெரும் கவனத்தை பெற்றது. அதைத் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தையும் இயக்கினார். சமூக பிரச்சனைகளை வெளிப்படுத்தும் படைப்புகளை உருவாக்கிவரும் பா. ரஞ்சித், தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இருவரும் சந்தித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் இணைந்து புதிய படத்தில் பணியாற்றுவார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

