தமிழ் திரைப்படத்துறையில் திறமையான இளம் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. ஒரு படம் ஹிட் அடித்தால், அடுத்த படத்தில் ஏமாற்றம் தரும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து வெற்றிப் படங்களை வழங்கும் இயக்குநர்கள் மிகவும் குறைந்துவிட்டனர்.

புதிய இயக்குநர்களுக்கு திரையுலகில் நிலைப்பட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அதற்காக முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பை நாடுவார்கள். ஆனால், அந்த வாய்ப்பு எளிதாக கிடைக்காது. சில மிகுந்த திறமையுடன் இருப்பவர்களுக்கே இந்த மாதிரி பெரிய வாய்ப்புகள் கிடைக்கின்றன.அந்த வகையில், டிராகன் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்துவுக்கு, நடிகர் சிலம்பரசன் முன்னதாகவே ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளார். டிராகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, அவரது திறமையை நம்பிய சிலம்பரசன், தனது 51வது படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.
சிம்பு நம்பியதைப் போலவே டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனால், அஷ்வத் மாரிமுத்து – சிம்பு கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகிய வெற்றிக்குப் பிறகு, தற்போது சிம்புவின் 51வது படத்தையும் வெற்றிகரமாக இயக்கி, ஹாட்ரிக் வெற்றி அடைவார் என திரையுலகம் உறுதியாக எதிர்பார்க்கிறது.