Saturday, April 13, 2024

ஒரு புகைப்படத்தால் கோபமான எம்.ஜி.ஆர். – ஸ்டில்ஸ் ரவி சொல்லும் ரகசியம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவில் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞராக இருக்கும் ‘ஸ்டில்ஸ்’ ரவி தனது அதீத ஆர்வத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தால் எம்.ஜி.ஆர். டென்ஷனாகிவிட்டாராம்.

இது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் தளத்தின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

இது பற்றி ‘ஸ்டில்ஸ்’ ரவி கூறும்போது, “என் குருநாதர் சுபா சுந்தரத்திடம் நான் உதவியாளராகப் பணியாற்றி வந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். நடிக்கும் பல படங்களுக்கு சுபா சுந்தரம் போட்டோகிராபராக பணியாற்றி வந்தார். அவர் ஷூட்டிங்கிற்குப் போகும்போது நானும் உதவிக்குச் செல்வேன்.

இப்படி எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை ‘இதயக்கனி’ படப்பிடிப்பில் தனக்கு ஏதோ ஒரு வேலையிருக்கிறது என்று சொல்லி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டார்.

நானும் ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். சாப்பிடுவது போன்று ஒரு காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அதற்கு ‘ஸார் ஒரு ஸ்டில்’ என்று கேட்டேன். உடனே எம்.ஜி.ஆர். தட்டருகே கையை வைத்துவிட்டு கேமிரா பக்கம் முகத்தைக் காட்டினார். உடனேயே நான், ‘சாப்பிடுவதுபோல இருந்தால் நல்லாயிருக்கும் ஸார்’ என்றேன்.

உடனேயே அருகில் இருந்தவர்கள் பதட்டத்துடன் என்னிடம் ஏதேதோ சொன்னார்கள். அவர்கள் அனைவரையும் எம்.ஜி.ஆர். அதட்டிவிட்டு நான் சொன்னதுபோலவே வாய் அருகே கையை வைத்து போஸ் கொடுத்தார். அதை கிளிக் செய்தேன்.

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. கட்சியை ஆரம்பிக்க இருந்த சூழலில் சத்யா ஸ்டூடியோவுக்கு பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். ஸ்டூடியோவின் வெளியில் அனைத்து பத்திரிகையாளர்களும் எம்.ஜி.ஆருக்காகக் காத்திருந்தனர்.

அப்போது நான் மட்டும் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக உள்ளே சென்றேன். அங்கே ஒரு பாடல் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். ராதா சலூஜாவுடன் ஆடிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு ஷாட்டில் ராதா சலூஜாவின் சேலையை எம்.ஜி.ஆர். இழுப்பதுபோல ஷாட் இருந்தது.

எனக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றியதோ.. தெரியவில்லை.. உடனேயே எனது கேமிராவில் அதைப் படமாக்கிவிட்டேன். அப்படியே வெளியேயும் வந்துவிட்டேன்.

பின்பு அதனை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்க.. பல பத்திரிகைளில் அது பிரசுரமாகிவிட்டது. அதன் பின்புதான் அது எம்.ஜி.ஆர். பார்வைக்குப் போயிருக்கிறது.

அவர் உடனேயே சுபா சுந்தரத்திற்கு போன் செய்து “எப்படி அந்த போட்டோவை எடுக்கலாம்..? பிரஸ்ஸுக்குக் கொடுக்கலாம்..?” என்று கோபமாகக் கேட்டிருக்கிறார். “சின்னப் பையன்.. ஒரு ஆர்வத்துல எடுத்துக் கொடுத்திட்டான்..” என்று சொல்லி சமாளித்தார் சுபா சுந்தரம்.

இதேபோல் ‘பல்லாண்டு வாழ்க’ படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஒரு இடத்தில் நடந்து கொண்டிருந்தது. லாங் ஷாட்டில் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு புகைப்படக்கார பையன் அவருக்கே தெரியாமல் ஜூம் செய்த கேமிராவில் புகைப்படம் எடுத்துவிட்டான். அவன் புகைப்படம் எடு்த்ததை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டார்.

உடனேயே அந்தப் புகைப்படம் எடுத்த பையனை அருகில் அழைத்து, அந்தக் கேமிராவை வாங்கி அதில் இருந்த பிலிமை வெளியில் எடுத்துவிட்டார். “எப்போதும் என்னைக் கேட்காமல் படம் எடுக்கக் கூடாது…” என்று கண்டிப்புடன் சொன்னார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். எப்போதும் சிம்பிள்மேன்தான். ஆனால், தன்னுடைய இமேஜை அப்படியே மெயின்டெயின் செய்வார். பலரும் நினைப்பதுபோல பந்தாவாக வருவதோ, செல்வதோ கிடையாது. அவரைச் சுற்றியிருப்பவர்கள் அப்படியொரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

அவருடைய கார் வரும்வரையிலும் செட்டில் சலசலவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். அவரது காரை பார்த்தவுடன் அனைவரும் அமைதியாகி அவரவர் வேலையைக் கவனிக்கப் போவார்கள். அவரும் செட்டில் மிக சாதாரணமாகவே இருப்பார். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார். பழகுவார்…” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

- Advertisement -

Read more

Local News