2017 ஆம் ஆண்டு, மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த மற்றும் ரவி உடியவார் இயக்கிய ஹிந்தி திரைப்படம் ‘மாம்’ வெளிவந்தது. 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்த படம், 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் இப்படத்தை இணைந்து தயாரித்திருந்தார். இது, ஸ்ரீதேவி நாயகியாக நடித்த கடைசி திரைப்படமாகும். மேலும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது, அவர் மறைந்த பிறகு இப்படத்திற்காக வழங்கப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடிக்கவுள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
“குஷி நடித்த ‘ஆர்ச்சிஸ்’, ‘லவ்யப்பா’, ‘நடானியன்’ ஆகிய திரைப்படங்களை நான் பார்த்தேன். ‘நோ என்ட்ரி’ படத்திற்குப் பிறகு, அவரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளேன். அது ‘மாம் 2’ ஆக இருக்கும். அவரது அம்மா நடந்த பாதையை தொடர்ந்து செல்ல குஷி முயற்சி செய்கிறார். ஸ்ரீதேவி, அவர் நடித்த அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தார். அதேபோல், ஜான்வியும், குஷியும் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று போனி கபூர் தெரிவித்தார்.