Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“சாதாரண படத்தை அசாதாரணப் படமாக்கிவிட்டார் சிம்பு” – பாராட்டுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘மாநாடு’ படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழச் சினிமாவில் 100-வது நாளை தியேட்டர்களில் எட்டிப் பிடித்திருக்கிறது.

இதையொட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் படத்தின் வெற்றிக்காகப் பாடுபட்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், பைனான்ஸியர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“எண்ணித் துணிக கருமம்’ என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் ‘துணிந்து இறங்கு’ எனத் தட்டிக் கொடுப்பவர்.

துணிந்து இறங்கி செய்த படம் ‘மாநாடு’. இன்று தன்னம்பிக்கையின் உச்சமாய் 100-வது நாளைத் தொட்டிருக்கிறது.

சமீபகாலமாக 100-வது நாள் என்பது கடலில் போட்ட பெருங்காயமாய் கரைந்தே போய்விட்டது. ஆனால், 4 நாட்களில் திரையரங்கிலிருந்து படத்தை துரத்திவிடும் இந்நாட்களில் ‘மாநாடு’ தரமான வெற்றியை, மகிழ்ச்சியை தமிழ் சினிமாவோடு பகிர்ந்திருக்கிறது.

வெற்றி என்பது சாதாரணமல்ல. பல நல்ல உள்ளங்களின் கூட்டு உழைப்பு. இப்படம் 100 நாட்களைத் தொடக் காரணமான  இயக்குநர் வெங்கட் பிரபு, சிலம்பரசன் T.R.,  எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ்.ஏ.சி., வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, உதயா, மஹத், அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், பஞ்சு சுப்பு, மனோஜ் கே.பாரதி, அரவிந்த் ஆகாஷ், டேனி உட்பட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா ஒரு ராஜாங்கமே செய்துவிட்டார். அவருக்கு என் நன்றிகள்.

அசாத்திய தொழில் நுட்பங்களோடு அசத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், ‘எடிட்டிங் கிங்’ கே.எல்.பிரவீண், சண்டைப் பயிற்சியாளர் சில்வா,  கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், விளம்பர வடிவமைப்பு ட்யுனி ஜான் ஆகியோர் ‘மாநாடு’ படத்தின் பலமாக நின்றார்கள். அவர்களுக்கு என் மனதார்ந்த நன்றிகள்.

இந்தப் படத்தில் வேலை செய்த உதவி இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகி சுப்பு என்ற சுப்பிரமணியனுக்கும், மற்ற தயாரிப்பு மேலாளர்கள், லைட் மேன்கள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றிகள்.

எனது மிகப் பெரிய பலமாக நின்ற பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் தனித்தனியாக என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் கொண்டு சேர்த்த படம் இது. உடன் நிற்கும் நண்பர்களாக என்றும் இருங்கள். மிக்க நன்றி.

அலுவலக உதவியாளர்கள் மற்றும் வெற்றிக்காக வேண்டிக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

50% மட்டுமே இருக்கை அனுமதி என்ற போதிலும், தைரியமாக படத்தை வெளியிட்டு இன்று 100-வது நாளில் கொண்டாட வைத்திருக்கும் திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், சிலம்பரசனின் ரசிகர்கள்.. ரசிகர் மன்ற தலைமை உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநாடு,  வேறு மாநிலங்கள் என எல்லா இடங்களிலும் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், எஸ்.எஸ் ஐ. புரொடக்சன்ஸ் சுப்பையாவிற்கும்,   யுவன் ரெக்கார்ட்ஸ்,  விஜய் டிவி ,  சோனி லைவ் உட்பட்ட அனைவருக்கும் நன்றிகள்.

இப்படத்தை எனக்கு தயாரிக்க நம்பிக்கையோடு தோள் கொடுத்து நின்ற ஃபைனான்சியர் உத்தம் சந்த் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. தெலுங்கு ரீமேக் உரிமையைப் பெற்ற தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவிற்கும், இந்தி சேட்டிலைட் பெற்ற மணீஷிற்கும் நன்றிகள்.

வெளியீட்டின்போது உறுதுணையாக இருந்த அண்ணன் திருப்பூர் சுப்பிரமணியன், சத்யஜோதி தியாகராஜன், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, லலித் குமார், எஸ்.ஆர்.பிரபு, ஜே.எஸ்.கே.சதீஷ் குமார், அண்ணன் டி.ராஜேந்தருக்கும், மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

சாதாரண படமாகத் தொடங்கினேன். இரண்டு வருட கொரானா இடைவெளி யாவையும் தாண்டி என்னோடு பயணித்த அன்பின் இளவல் சிலம்பரசன் இப்படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அதனால் மட்டுமே இது அசாதாரணப் படமாக மாறியது.

உடல் எடை குறைத்து புதிய நபராக இப்படத்தில் தோன்றி மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார் என்பதே உண்மை. மிக்க நன்றி அவருக்கு.

மிக முக்கியமாக, மாநாடு படத்தின் வெற்றி மேஜிக்காக மாறிய எஸ்.ஜே.சூர்யாவுக்கு என் மானசீக நன்றிகள்.

வெங்கட் பிரபுவின் அயராத உழைப்பும்… இயக்கமும் ஒரு தெளிவான வெற்றியைத் தேடித் தந்தது. இவர்களால் இன்று மாநாடு’ நூறு நாட்களைத் தொடுகிறது.

உலகம் முழுக்க உள்ள என் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மிகப் பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். இப்படத்திற்கு பணியாற்றிய மக்கள் தொடர்பாளர் A.ஜான்-க்கும் என் நன்றிகள். இதயம் முழுக்க மகிழ்வுடன் இவ்வெற்றியை என் தாய், தந்தையருக்கு சமர்ப்பிக்கிறேன்…” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News