மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “படை தலைவன்”. இப்படத்தை அன்பு என்பவர் இயக்கியிருக்கிறார். கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், மேலும் இசையமைப்பில் இளையராஜா ஈடுபட்டுள்ளார். இளையராஜா எழுதி இசையமைத்த பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில், அதிரடியான முயற்சியாக நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரையில் காண்பிக்க உள்ளனர்.

இப்போது படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ஆனால், பொங்கல் வெளியீட்டில் அஜித்தின் “விடாமுயற்சி” மற்றும் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால், “படை தலைவன்” படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் காத்திருந்தனர். தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், “படை தலைவன்” பொங்கல் வெளியீடாக வரக்கூடியதாக, தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.