எஸ். வினோத்குமார் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குடும்பஸ்தன்’. இதில் நடிகர் மணிகண்டன் மற்றும் ஷான்வி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வைசாக் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜனவரி 24ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கலகலப்பான படமாக உருவாகியுள்ள இதன் டிரைலர் ஜனவரி 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி கூறுகையில், ‛‛என் கனவை ஆதரித்த என் குடும்பத்திற்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. முத்தமிழ், நிவி, ஜென்சன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ஜென்சன் தமிழ் சினிமாவின் அடுத்த நாகேஷ் என நம்புகிறேன். எழுத்தாளர் பிரசன்னா பல விஷயங்களில் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். இப்படம் நல்ல முறையில் வந்துள்ளது” என்றார்.
நடிகர் மணிகண்டன் தனது உரையில், ‛‛இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களை ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்ததால், நான் இப்படத்தில் நடிக்க தயாரிப்பாளரும் இயக்குநரும் காத்திருந்தார்கள். முதலில் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதையை எழுத நினைத்தார். ஆனால், இன்றைய காலத்தில் குடும்பத்தை நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால், அதையே திரைப்படமாக்கியுள்ளார்.
இது பார்வையாளர்களின் வாழ்க்கையுடன் பல வழிகளில் இணைந்து இருக்கும். அதே நேரத்தில் குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ படமும் ‘குடும்பஸ்தன்’ படத்தோடு வெளியாகிறது. ‘பாட்டல் ராதா’ படத்தை பார்த்து எமோஷனல் ஆகி அழுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் ராஜேஷுடனும் நான் பலமுறை வாக்குவாதம் செய்துள்ளேன். ஆனால் அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகத்தான். அவர் அதை சரியாக புரிந்து கொண்டார். சினிமாவில் சிறு பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவைப்படுகிறது. நான் செய்த சிறிய வேலைகளுக்கே அளவில்லாத பாராட்டுகளை அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. ‘குடும்பஸ்தன்’ படமும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.