‘கோலமாவு கோகிலா’, ‘கூர்கா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்களால் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவரது வேகமான பேச்சுமுறையும், துல்லியமான ‘டைமிங்’ காமெடியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அவர், டெலிவிஷன் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அந்தத் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு திரையுலகிலும் தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல், மலையாள மொழியில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வரும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாளத்தில் 3 படங்களில் மற்றும் கன்னடத்தில் மேலும் 3 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த வகையில், பான் இந்தியா அளவில் தனக்கென தனி இடம் அமைத்துக் கொண்டு வளர்ந்து வரும் ரெடின் கிங்ஸ்லியின் பயணம், பல முன்னணி நடிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.
இந்தத் தகவல்களைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது நடிகர் ரெடின் கிங்ஸ்லி, “தமிழ் திரைப்படங்களைத் தாண்டி பிற மொழி திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேர்மை மற்றும் உழைப்பும் இருந்தால் யாரும் வளர முடியும். நான் இன்று எங்கே இருக்கிறேனோ அதற்குக் காரணமான, எனக்கு ஆதரவளித்த அனைவரையும் நன்றியுடன் நினைக்கிறேன். ரசிகர்களை மகிழ்விப்பதே என் பிரதான பணி,” என மிகுந்த பணிவோடு தெரிவித்தார்.