மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் தற்போது வரை 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அவர் தனது லட்சியமான இயக்குநர் கனவை நனவாக்கி, நான்கு வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை கொண்டு “லூசிபர்” என்ற பெரிய வெற்றி திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர், மோகன்லாலை வைத்து “ப்ரோ டாடி” என்ற மற்றொரு திரைப்படத்தை இயக்கி அதிலும் வெற்றியைப் பெற்றார்.
தற்போது “லூசிபர்” படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” படத்தின் இயக்கத்தை முடித்து விட்டார். “லூசிபர்” போல் இந்த இரண்டாம் பாகமும் மிக விறுவிறுப்பாக உருவாகியுள்ளது என்று சமீபத்திய பேட்டியில் மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லால் பிரித்விராஜுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசுகையில், பிரித்விராஜ் ஒரு அற்புதமான இயக்குநர். அவருக்கு ஒவ்வொரு சாதனங்களும், லென்ஸ்களும், நடிகர்களை எப்படிச் சிறப்பாக கையாளுவது என்பதும் நன்றாகவே தெரியும். அவர் நினைத்ததைப் பெறும் வரை எந்த நடிகரையும் விட மாட்டார். அவருடன் பணிபுரிவது சற்று கடினம் தான். ஆனால், அவரது வழியில் நீங்கள் சரண்டர் ஆனால் மட்டுமே சிறந்த படைப்புகள் கிடைக்கும். நடிகர்களின் ஈகோவை அவர் பொருட்படுத்த மாட்டார்” என்று புகழ்ந்துள்ளார்.