தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி வேடங்களில் மட்டுமே நடித்திருந்தவர் நடிகர் சூரி. பின்னர், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தின் மூலம், அவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின், ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை பாகம் 2’ ஆகிய படங்களிலும் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்போது, விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘மாமன்’ திரைப்படம் மே 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெறியது.
அந்த விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது அவர் பேசுகையில், “சூரி அண்ணனின் வளர்ச்சி நம்மில் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் வளர்வதை மற்றவர்கள் பார்த்து உண்மையிலேயே மகிழ்வது என்பது தான் உண்மையான வளர்ச்சி. தற்போது நான் ஒரு சிறிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். அதற்குள் 10 கதைகள் வந்திருந்தால், அதில் 5 கதைகள் சூரி அண்ணனுக்கே தான் வருகின்றன. இது மிகப்பெரிய வளர்ச்சியைக் குறிக்கிறது. உங்களுக்கு இன்னும் நிறைய வெற்றிகள் கிடைக்க வேண்டும்” என்று கூறினார்.