கன்னட நடிகர் உபேந்திரா சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன் தொடர்ச்சியாக தற்போது ராம் பொத்தினேனி நடித்துள்ள ஆந்திரா கிங் தாலுகா திரைப்படத்தில் ‘ஆந்திரா சூப்பர் ஸ்டார்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

சமீபத்தில் தெலுங்கு படங்கள் கர்நாடகாவில் வெளியாகும் போது, புரமோஷன் நிகழ்ச்சிகளில் மற்றும் போஸ்டர்களில் கன்னட மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பலரால் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட காட்சிகளை அதிகமாக வெளியிடாமல், தெலுங்கு வெர்சன் புரமோஷனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் பல அமைப்புகள் கருத்து தெரிவித்தன.
இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற சமீபத்திய ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் உபேந்திராவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர்,
இது தெலுங்கு படங்களுக்கு மட்டும் அல்ல.எந்த மொழிப் படமாக இருந்தாலும் கன்னடத்தில் வெளியாகும் போது அந்த மொழிக்குரிய மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட வேண்டும். கன்னடத்தில் டப்பிங் செய்யப்படுகிற படங்கள் வந்தால், அதற்கான போஸ்டர்களில் கன்னட மொழி இடம்பெற வேண்டும். அதோடு, இங்கு நேரடி தெலுங்கு படங்களை விட கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட படங்களே அதிக வசூலை ஈட்டுகின்றன. அதற்கு புஷ்பா படத்தை எடுத்துக்காட்டாக கூறலாம்,” என்று தெரிவித்தார்.

