ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகராக வலம்வரும் நட்டி, தற்போது ‘நீலி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘நீங்காத எண்ணம்’ மற்றும் ‘மேல்நாட்டு மருமகன்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தை உதயா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு, வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது இப்படம்.

படத்தைப் பற்றி இயக்குநர் எம்எஸ்எஸ் கூறும்போது, “நீலியுடன் தொடர்புடைய பல வரலாற்று தகவல்களை ஆராய்ந்து, சில கற்பனைக் கூறுகளையும் இணைத்து இப்படத்தின் கதையை உருவாக்கினோம். கதையின் தனித்துவத்தை கேள்விப்பட்டவுடன் நட்டி மிகவும் ஈர்க்கப்பட்டு உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இரண்டு முக்கிய கதாநாயகிகள் இதில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்திற்கு நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்று வருகிறது என்றார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் நீலி என்ற பெண் தெய்வத்தை மையமாகக் கொண்ட பல கதை, பாடல்கள் இருக்கின்றன. அந்த பெண் ஏமாற்றப்பட்டதற்குப் பின்னர் பழிவாங்கியதைப் பற்றியும், அத்தெய்வத்திற்கு கோயில்கள் பல ஊர்களில் உள்ளதையும் நாம் காணலாம்.மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.