மலையாளம் பிக்பாஸ் சீசன் 7, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கியது. வழக்கம்போல் இதையும் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் போட்டியாளர்களான அதிலா நஸரின், பாத்திமா நூரா ஆகியோர் தன்பால் ஈர்ப்பாளர்கள் என வெளிப்படையாகக் கூறியதால் வீட்டிற்குள் சர்ச்சைகள் வெடித்தன.

இதற்கிடையில், மற்றொரு போட்டியாளர் லஷ்மி, “தன்பால் ஈர்ப்பாளர்கள் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. பிக்பாஸ் போன்ற சர்வதேச மேடைகளில் இதை சாதாரணமாக்க தேவையில்லை. அவர்களை யாரும் வீட்டுக்குள் கூட சேர்க்க மாட்டார்கள்” என்று பேசினார்.
இந்த கருத்தை வார இறுதியில் மோகன்லால் கடுமையாகக் கண்டித்தார். அவர், “தன்பால் ஈர்ப்பாளர்களாக இருப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. எல்லோரும் மனிதர்கள்; அனைவருக்கும் மரியாதை தேவை. வாழ்வதற்கு அனைவருக்கும் சம உரிமை உண்டு. உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால், அந்தக் கருத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கிறீர்கள்? ‘அவர்களை யாரும் வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்கள்’ என்று சொல்ல உங்களுக்கென்ன உரிமை? நான் அவர்களை என் வீட்டிற்குள் கூட அனுமதிப்பேன். உங்களுக்கு அவர்களுடன் இருக்க முடியவில்லை என்றால், நீங்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறலாம்” என்று எச்சரித்தார்.