கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதில், மலையாள சினிமாவை பற்றியும் அவர் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “என்னுடைய ஆரம்ப காலங்களில் அதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பெரும் ஆர்வம் இருந்தது. ஒரே மாதிரியான சூழ்நிலையில், எந்த முன்னேற்றமுமில்லாமல் இருப்பது போன்ற ஒரு சலிப்பான உணர்வு இருந்தது. அதனால், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மலையாள சினிமாவுக்குச் சென்றேன். அங்கு என் நடிப்பு முறை, சினிமாவைப் பார்க்கும் பார்வை என அனைத்தும் மாறின. அந்த அனுபவம் எனக்கு ஒரு சிறந்த பயிற்சி காலமாக அமைந்தது.
என் குருநாதராக இருந்த இயக்குநர் கே.பாலச்சந்தரும், மலையாள சினிமாவும் எனக்கு சினிமா என்ற விஷயத்தை மேலும் கற்றுத்தந்தது. இன்று பலரும் கூகுளில் தேடிப் பயில்கிறார்கள் அல்லவா, நான் அந்த வகையில் பாலச்சந்தரிடமும், மலையாள சினிமாவிடமும் கற்றுக்கொண்டேன். மலையாள நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் என் செயல்முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. என தெரிவித்துள்ளார்.