நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், ரவி மோகன், அவரது தோழியாக கூறப்படும் கெனிஷா என்பவருடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல விழாவிற்கு ஜோடியாக பங்கேற்றார். இதனையடுத்து, ரவிமோகன் – கெனிஷாவின் நெருக்கம் பற்றி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: என் தனிப்பட்ட விஷயங்கள் பொது மேடையில் விவாதிக்கப்படுவதைக் காணும்போது எனக்கு மிகவும் வலிக்கிறது. என் மவுனம் பலவீனம் அல்ல. அது என் வாழ்க்கைக்கான போராட்டம். ஆனால் என் நேர்மையையே கேள்விக்குள்ளாக்கும் போது, பேசாமல் இருக்க முடியாது. இது எனது வாழ்க்கை, என் உண்மை. சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அது உண்மையை வெளிக்கொண்டு வரும். திருமண பந்தத்தை காப்பாற்ற நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஒரு கட்டத்தில் அதனை விட்டுவிட்டேன். இது எளிதாக எடுத்த முடிவு அல்ல.
மவுனம் குற்றமாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. தற்போது என் குணத்தையும், எனது தந்தை பாத்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் பொய் குற்றச்சாட்டுகளால் நான் அவதூறு செய்யப்படுகிறேன். இந்த பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் முழுமையாக மறுக்கிறேன். மனதில் இருந்த என் முன்னாள் மனைவி உடனான வாழ்க்கை, நான் வீட்டில் இருந்து வெளியேறிய நாளிலேயே முடிந்தது. என் கடைசி மூச்சுவரை அப்படியே தொடரும்.
என் மனதை அதிகம் சிதைத்தது என்னவென்றால், அவர்களின் லாபத்திற்காக என்னை ஒரு கருவியாக கையாண்டனர். என் பிள்ளைகளை கூட பார்க்க முடியாதபடி எனக்கான எல்லா வழிகளையும் மூடினர். தற்போது பவுன்சர்களை கொண்டு என் குழந்தைகளை பார்க்க விடாமல் தடுக்கின்றனர். என்னுடைய குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்புகிறேன். என் முன்னாள் மனைவிக்கும், என் குடும்பத்திற்கும் நான் என்னால் முடிந்த அத்தனை ஆதரவையும் அளித்துள்ளேன். ஒருநாள் என் பிள்ளைகள் உண்மையை உணர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் என் மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்தேன்; மகன்களை அல்ல. அவர்களுக்காக நான் வாழ்க்கையில் மிக சிறந்ததை செய்துள்ளேன், இன்னும் செய்வேன். என் வாழ்வு என் இரண்டு மகன்களுக்காகவே.
என் குரலையும், கவுரவத்தையும், சம்பாதித்த சொத்துகளையும், சமூக வலைதள கணக்குகளையும், எடுக்கும் முடிவுகளையும், குடும்ப உறவுகளையும் என அனைத்தையும் இழந்து, தனக்கே உரிய உரிமைகள் இல்லாமல் வாழ்ந்தேன். 5 ஆண்டுகளாக என் சொந்த பெற்றோர்களுடன் கூட உறவாட தடை விதித்தனர். என் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்களுக்காக மட்டுமே அனைத்தையும் பயன்படுத்த முயற்சித்தார்கள். என்னை கணவராக பார்க்கவில்லை; தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தனர்.
மவுனத்திற்கும் ஒரு எல்லை உண்டு. நான் அமைதியாகவே பிரிந்து சென்றேன். திரைப்படத் துறையிலுள்ளவர்கள் உண்மையை அறிவார்கள். பல முறை என் பேரில் கடன் உத்தரவாதம் வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். இதன் காரணமாக, என் சொத்துகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. 10 நாட்களுக்கு முன்புகூட, அவரது தாயாரே என்னை கடன் உத்தரவாதம் அளிக்கும்படி மீண்டும் கட்டாயப்படுத்தினார். இது தான் அவர்களது நிஜ முகம்.
அந்த பதிவிலேயே கெனிஷா பற்றி அவர் கூறும்போது, ‛‛கெனிஷா பிரான்சிஸ் என் நண்பராக இருந்தவர். நான் நீரில் மூழ்கும்போது, என்னை காப்பாற்ற முயற்சித்தவர். பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் நான் வீட்டை விட்டு வெளியேறிய போதும் எனக்காக நின்றவர் கெனிஷா. சூழ்நிலையை உணர்ந்து, தயங்காமல் வந்த ஒரு அழகான துணை அவர். என் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர். நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, பண ரீதியாக போராடிய போது அனைத்திலும் அவர் துணை நின்றார்.
நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர் தான். அவரின் நடத்தை, தொழிலை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர் ஒரு தெரபிஸ்ட். அதைவிட அவர் அற்புதமான பாடகி. ஆரம்பத்தில் என் கதையை கேட்ட நிமிடத்தில் எனக்கு ஒரு தோழியாக மட்டும் உதவுவேன் என கூறினார். எனது வாழ்நாளில் என்னை உண்மையில் புரிந்து கொண்டவர்கள் யார், என்னை பயன்படுத்தியவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். யாரும் என் வாழ்க்கையை வீழ்த்த முடியாது.
பீனிக்ஸ் பறவை போல மறுபடியும் எழுவேன். கீழே விழும் ஒவ்வொரு நேரமும், மேலே உயர மட்டுமே வழியிருக்கும். என் முன்னாள் மனைவியும், அவருடைய கெட்ட வழிகாட்டிகளும், பொதுமக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், சுயலாபத்துக்காக ஏவிய சித்தரிப்புகளால் என் மீது திட்டமிட்டு பரப்பிய விஷயங்கள் அதிர்ச்சியூட்டுவதாகவும், பரிதாபகரமாகவும் இருக்கிறது. என்னையும், என் பிள்ளைகளையும் தவறாக சித்தரித்து, நிதி விவகாரங்களில் ஆட்படுத்தும் நோக்கில், தவறான தகவல்களைப் பரப்பி, என் சொத்துக்களில் பாதியை இழக்க செய்தனர். சில வருடங்களுக்கு முன்னர், என்னை சில நடிகைகளுடன் தவறாக இணைத்து சில உண்மையற்ற கிசுகிசு செய்திகளை பரப்பினர்.
நீதி என்றால் நீதிமன்றங்களில் தேடப்பட வேண்டும், சமூக ஊடகங்களில் அல்ல. ஆனால், சிலர் தங்களை பிரபலமாக வைத்திருக்க, அல்லது பிரபலத்துடன் வாழும் நோக்கில், சர்ச்சைகளை மட்டுமே வாழ்வாதாரமாக பயன்படுத்துகிறார்கள். என் முன்னாள் மனைவியின் செல்வமிக்க குடும்பம், என் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்தி வந்தார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.