‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி புகழ்பெற்றவர் KPY பாலா. பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். முகபாவனை, உடலமைப்பு, மற்றும் தனித்துவமான கவுண்டர் வசனங்களால் பிரபலமான அவர், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு, சமூக சேவையில் குறிப்பாக ஏழை எளியோருக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்
தற்போது பாலா திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை, ‘ரணம்’, ‘அறம் தவறேல்’ போன்ற படங்களை இயக்கிய ஷெரிஃப் இயக்குகிறார். இதில் நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் இணைந்து வழங்கியிருக்கின்றனர். ஒளிப்பதிவாளராக பாலாஜி கே. ராஜா பணியாற்றுகிறார்.
இந்தப் படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது அவர்களது முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் காட்சிகளை கொண்ட கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘காந்தி கண்ணாடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வீடியோவில், தனது தோற்றத்தினை கிண்டலடித்தவர்களின் முன்னிலையில் கதாநாயகனாக பாலா தோன்றும் காட்சி இடம்பெற்று இருக்கிறது.