Friday, April 12, 2024

இளையராஜாவிடமிருந்த பிரிய காரணமான படம் – பிறைசூடனின் அனுபவம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாக இருந்தது.

அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘சோலைப் பசுங்கிளியே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இந்தப் பாடல்தான் அந்தாண்டுக்கான சிறந்த பாடலுக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்தப் படம் பற்றி இளையராஜாவிடம் எடுத்துச் சொல்லி அவரைப் படம் பார்க்க வைத்து இசையமைக்க ஒத்துக் கொள்ள வைத்தவர் கவிஞர் பிறைசூடன். ஆனாலும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து முடியும் தருவாயில் அவரிடம் இருந்து தான் விலக நேரிட்டது என்கிறார் கவிஞர் பிறைசூடன்.

அது என்ன கதை என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.

“ராஜ்கிரண் எனது ஆரம்பக் கால நண்பர். அவர் நடிப்பில் உருவான ‘என் ராசாவின் மனசிலே’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதற்காக என்னை அழைத்து டபுள் பாஸிட்டிவ்வாக படத்தைப் போட்டுக் காட்டினார். நன்றாக இருந்தது. “நான் இளையராஜாவிடம் இது பற்றிப் பேசுகிறேன்” என்று ராஜ்கிரணிடம் கூறினேன்.

அடுத்த நாள் இளையராஜாவுடன் அமர்ந்து மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மெதுவாக, “ராஜ்கிரண் ஒரு படத்துல நடிச்சிருக்கார். படம் நல்லாயிருக்கு…” என்றேன். நான் சொல்லி முடிப்பதற்குள்ளாக “எந்திரிங்க” என்றார் கோபத்துடன் இளையராஜா. “ஒரு படம் நல்லாயிருக்குன்னு ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு.. இயக்குநரா.. தயாரிப்பாளரா..?” என்றார் இளையராஜா.

நான் கையில் இருந்த கவளம் சோற்றை சாப்பிடலாமா.. வேண்டாமா.. என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டேன். மானம் போனாலும் போகிறது.. இப்போது நமக்கு சாப்பாடுதான் முக்கியம் என்று நினைத்து அப்படியே தொடர்ந்து சாப்பிட்டேன். ஆனாலும் கொஞ்சம் கோபம் இருந்ததால் உடனேயே வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டேன்.

நான் வந்த பிறகு என்னைத் தேடியிருக்கிறார் இளையராஜா. நான் இல்லாததால் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நானும் திரும்பவும் சென்றேன். “என்ன கோச்சுக்கிட்டீங்களா..?” என்றார். “இல்ல.. படம் நல்லாயிருக்குன்னு சொல்ல வந்தேன்…” என்றேன். “சரி. எனக்குப் படத்தைப் போட்டுக் காட்டச் சொல்லுங்க…” என்றார்.

இளையராஜாவுக்காக அந்தப் படத்தை தேவி ஸ்ரீதேவி தியேட்டர்ல போட்டாங்க. அவர்கூட நான் இளையராஜா, ராஜ்கிரண், இயக்குநர் கஸ்தூரி ராஜா எல்லாரும்தான் பார்த்தோம். படம் பார்த்திட்டு இளையராஜாவும், ராஜ்கிரணும் ஒரே கார்ல போயிட்டாங்க. இயக்குநர் கஸ்தூரி ராஜா வேற ஒரு கார்ல போயிட்டாரு. என்னை மட்டும் ‘அம்போ’ன்னு விட்டுட்டாங்க. நான் அங்கேயிருந்து நடந்தே வீட்டுக்குப் போனேன்.

இந்த நன்றிக் கடனுக்காக எனக்கு இந்தப் படத்துல ஒரு பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் இளையராஜா. அந்தப் பாட்டுதான் ‘சோலை பசுங்கிளியே’ பாடல். மீனா இறந்தவுடன் ராஜ்கிரண் பாடும் பாடல் அது.

நான் இந்தப் பாடலுக்காக ஒன்றரை கிலோ வரும் அளவுக்கான பேப்பர்களில் பல்லவிகளையும், சரணங்களையும் எழுதிக் கொண்டு வந்திருந்தேன். ஆனால் ராஜ்கிரண் “எதுவுமே பிடிக்கலை”ன்னுட்டாரு. அவருக்கு என்ன விருப்பம்ன்னா இந்தப் பாடலை ராஜாவே எழுதி, அவரே பாடணும்ன்றதுதான்.

இது தொடர்பாக எங்களுக்குள்ள பேச்சுவார்த்தை போயிட்டிருக்கிறதை ராஜா கண்ணாடி வழியா பார்த்திட்டாரு. உடனே என்னை உள்ள கூப்பிட்டாரு. “என்ன செலக்ட் பண்ணிட்டீங்களா..?” என்றார். “இல்லங்க.. அவருக்கு நீங்க பாட்டெழுதி நீங்களே பாடணும்ன்னு நினைக்கிறாரு. அதான் எதுவுமே நல்லாயில்லைன்றாரு…” என்றேன்.

“அதைக் கொடுங்க”ன்னு என் கைல இருந்த பேப்பர்களை கேட்டு வாங்கிப் படிச்சாரு ராஜா. அதுல ‘சோலைப் பசுங்கிளியே’ என்பதை படிச்சவுடனேயே.. “இந்த சரணம் நல்லாயிருக்கே”ன்னாரு. உடனேயே ராஜ்கிரணையும் உள்ள கூப்பிட்டுச் சொன்னாரு. அவரும் அதைப் பார்த்திட்டு “ஆமா.. நல்லாயிருக்கு”ன்னாரு. அடுத்தடுத்து சட்டு, சட்டுன்னு நான் எழுதின சரணங்களையும் ராஜாவே செலக்ட் செய்து “இதெல்லாம் நல்லாயிருக்கே”ன்னு சொன்னார். இதையெல்லாம் ராஜ்கிரணும் “ஆமாங்க.. நல்லாயிருக்குங்கய்யா…” என்றார்.

அவ்ளோதான்.. பாட்டு செலக்ஷனாகி இளையராஜாவே அதைப் பாடிட்டார். அவர் பாடிட்டு வெளில வரும்போது அவர் கண்ல கண்ணீர் சிந்தியிருந்துச்சு. அப்படியொரு சோகத்தைக் கொடுத்தது அந்தப் பாடல் வரிகள்..” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் பிறைசூடன்.

- Advertisement -

Read more

Local News