பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜா தேவி, 87வது வயதில் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல குறைவால் காலமானார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் வசித்து வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளிலும் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். ரசிகர்களால் ‘கன்னடத்து பைங்கிளி’ என அழைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டவர்.

1938ஆம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கர்நாடக மாநிலத்தின் மைசூரில் பிறந்த சரோஜா தேவி, 17வது வயதில் ‘மகாகவி காளிதாஸ்’ எனும் கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வெற்றி பெற்றார். தமிழில் ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர்-இருடன் நடித்தபோது பெரும் வரவேற்பு பெற்றார். தொடர்ந்து தமிழில் மட்டும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருவருடனும் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகிய முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். இவர் கடைசியாக தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய, சூர்யா நடித்த ‘ஆதவன்’ திரைப்படத்தில் சிறப்புப் பங்காற்றினார். அதன் பிறகு திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றார்.
வயதானதையொட்டி உடல்நலக் கோளாறுகள் வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். சரோஜா தேவிக்கு ஸ்ரீ ஹர்ஷா என்ற கணவர் இருந்தார்; அவர் 1986-இல் இறந்துவிட்டார். அவர்களுக்கு புவனேஷ்வரி மற்றும் இந்திரா என்ற இரு மகள்கள் மற்றும் கவுதம் ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளனர். திரையுலகுக்கு வழங்கிய சிறப்பான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகள் உள்ளிட்ட மாநில அரசு விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளார்.