Saturday, April 13, 2024

க/பெ ரணசிங்கம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“காய்ந்து கிடக்கும் பொட்டல் காட்டில் கொட்டிய அடை மழையாக ஓர் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது ‘க/பெ ரணசிங்கம்’.

இந்தக் கொரோனா லாக் டவுன் காலத்தில் ஓடிடி-யில் வெளியான எல்லாத் தமிழப் படங்களையும் விஞ்சி நிற்கிறது ‘க/பெ ரணசிங்கம்’. காரணம், படம் பேசி இருக்கும் நிதர்சன அரசியல்தான்.

வெளிநாட்டில் வேலை செய்யும் தன் கணவனுக்கு நேர்ந்த விபரீதத்திற்கு நீதி கேட்டுப் போராடும் ஒரு சாமானியப் பெண்ணின் சிவப்புப் போராட்டம்தான் படத்தின் கதை.

படம் துவங்கும் முதல் ப்ரேமிலே கதை துவங்குவது படத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைத்தது. படம் முழுதும் ஒரு நல்ல படம் பார்க்கிறோம் என்ற நிம்மதி தொடர்ந்து கொண்டே இருந்தது. அரசியல்வாதிகளின் கெளரவம், சுயநலம் எல்லாம் சேர்ந்து சாமானியரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை மிக எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் விருமாண்டி.

படத்தின் நகர்வுகளைப் பற்றியோ அல்லது திரைக்கதையைப் பற்றியோ பேசினால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்து விடும். அதனால் கதையைத் தவிர்த்து விடுவோம்.

ரணசிங்கமாக வரும் விஜய்சேதுபதி ராமநாதபுரத்தானாக மனதிற்குள் வந்து விடுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்தப் படம் மேலும் ஒரு கிரீடத்தைச் சூட்டியுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் ஆபிஸில், சென்னை தெருக்களில், டெல்லி வீதியில் என ஒரு கைக் குழந்தையோடு அவர் அலையும் காட்சிகளில் எல்லாம் எளிய குடும்பப் பெண்களைப் பிரதிபலிக்கிறார். பூ ராமு, ரங்கராஜ் பாண்டே, முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ் என படத்தில் அத்தனை கேரக்டர்களும் பொருத்தமான தேர்வு.

படத்தில் ஏகம்பரத்தின் கேமராவும் ஜிப்ரானின் பின்னணி இசையும், கண்களையும் காதையும் விட்டு விலகாமல் இருப்பது சிறப்பு.

“போராடுற எல்லாரும் சமூகவிரோதி இல்ல” என்பதில் துவங்கி, “இந்த நாட்டுல வாழ்றதுக்காக படுற கஷ்டத்தை விட பெருசு எதுவுமில்ல” என்ற வசனம் வரை வசனகர்த்தா சண்முகம் முத்துச்சாமியின் பேனாவில் அனல் பறக்கிறது.

மக்களுக்கு வில்லனாக இருப்பது மக்களைக் காப்பதாய்ச் சொல்லும் அரசும், அதிகாரிகளும், இங்கிருக்கும் சிஸ்டமும்தான் என்பதை நெத்திப் பொட்டில் அடித்துப் பேசியுள்ளது படம்.

நிச்சயமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத… தவிர்க்க கூடாத படம்.

- Advertisement -

Read more

Local News