பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘மாமன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்துள்ளார். மேலும், ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தாய்மாமனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியதும், அது பல குடும்பங்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், இன்று மே 16 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. சூரி, இப்படத்தை பார்ப்பதற்காக நேரடியாக திரையரங்கிற்கு சென்றார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் படம் வெளியானதற்குப் பிறகு மக்களின் வரவேற்பைப் பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த சூரி, “படத்தை பார்த்த மக்கள் ‘ரொம்ப நன்றாக இருக்கிறது’ என்று கூறினார்கள். பலரும் கண்ணீருடன் வெளியே வந்தனர். படம் முடிவடைந்ததும் அனைவரும் கைத்தட்டினர். அது தான் இப்படத்தின் உண்மையான மரியாதை என நினைக்கிறேன்.
அந்த வகையில், ‘மாமன்’ திரைப்படத்தை பார்த்தவர்கள் உணர்வுபூர்வமாக கைத்தட்டினார்கள். பெண்கள் அவர்களது வாழ்க்கையை இந்தக் கதையுடன் தொடர்புபடுத்திக்கொண்டார்கள். இயக்குநர் இப்படத்தை எதற்காக எடுத்தாரோ, அந்த செய்தி தேவையானவர்களைச் சென்றடைந்துவிட்டது. எல்லா குடும்பங்களும், உறவுகளும் இந்தப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.