கடந்த மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, 100 கோடி ரூபாய் வசூலையும் அள்ளியுள்ளது. இயக்குநராக சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், “லவ் டுடே”, “டிராகன்” ஆகிய இரு திரைப்படங்களிலும் நடிகராக மாறி, தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கிறார். இயக்குநர்களாக இருந்து நடிகர்களாக மாறியவர்களை வைத்து படம் இயக்குவது, அந்த படத்தின் இயக்குநர்களுக்கு எப்போதும் ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.

இது போன்ற அனுபவங்களை பல முன்னணி இயக்குநர்களும் தங்கள் பேட்டிகளில் பகிர்ந்து வந்துள்ளனர். “டிராகன்” திரைப்படத்தில், கே.எஸ். ரவிக்குமார், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரதீப் ரங்கநாதன் என நான்கு இயக்குநர்களே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களை ஒரே திரைப்படத்தில் கொண்டு வந்து இயக்கியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இதில், இதுவரை பார்த்திராத கெளதம் மேனனின் நடனத்தையும், அஸ்வத் மாரிமுத்து சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். மேலும், படத்தின் மையக்கரு மிஷ்கினின் கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது.
இதுகுறித்து அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நினைவில் கொள்ள வேண்டிய ஒரு அழகான தருணம் இது! வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த நான்கு தனித்துவமான இயக்குநர்களை நடிகர்களாக இயக்குவது எனக்கென்று ஒரு மறக்க முடியாத அனுபவம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.டிராகன்” படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது. இதில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் இது சிம்புவின் 51-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.