மலையாளத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் கீது மோகன்தாஸ். தமிழில் ‘நள தமயந்தி’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பின் இயக்குனராக மாறி விருதுகள் வென்ற படங்களை இயக்கி வருகிறார். தற்போது கமர்ஷியல் அம்சங்களுடன் கன்னடத்தின் முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தை இயக்கி வருகிறார் கீது மோகன்தாஸ்.

இந்நிலையில் இவருக்கும் யஷ்ஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் சுதேவ் நாயர், இது பொய்யான தகவல் எனத் தெரிவித்துள்ளார்.
“இது சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. நான் பணியாற்றிய படங்களில் அழகாகவும், எந்த டென்ஷனும் இல்லாமல் இயங்கிய படக்குழு என்றால் அது இதுதான். குறிப்பாக இயக்குனரும் ஹீரோ யஷும் எந்த ஈகோவும் இன்றி ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வதை நான் நேரில் பார்த்துள்ளேன். இவர்களின் ஒரே நோக்கம் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதுதான்” என்று சுதேவ் நாயர் தெரிவித்துள்ளார்.