தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா: தி ரைஸ்’ மற்றும் ‘புஷ்பா: தி ரூல்’ படங்களின் மூலம் அவர் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார். ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்காக தேசிய விருது பெற்றதோடு, இரண்டாவது பாகம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனால், அவரின் அடுத்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது, அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அட்லீ இயக்கும் படம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த தகவலின்படி, இப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய மூன்று முன்னணி நடிகர்களை படத்தில் இணைக்க அட்லீ திட்டமிட்டுள்ளார் என்றெல்லாம் புது புது தகவல்கள் உறுதிப்படுத்தபடாமல் உலாவருகின்றன.இந்த வதந்திகளுக்கு மத்தியில், அல்லு அர்ஜுன் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், அல்லு அர்ஜுன் தனது கதாபாத்திரத்தை இரட்டை வேடத்தில் முதன்முறையாக வடிவமைக்கும் படம் இதுவாக இருக்கும். இதனால், அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.