பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில், ‘ராமாயண’ கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் பிரமாண்டமான முயற்சியை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘ராமாயணா’ என்ற தலைப்பில் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியது. இரண்டு பாகங்களாக, முதல் பாகம் 2026-ல் மற்றும் இரண்டாம் பாகம் 2027-ல் வெளியாகவுள்ளது. ராமனாக ரன்பீர் கபூர், ராவணனாக யஷ் மற்றும் சீதையாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “நான் தற்போது ‘ராமாயணா’ படத்தை தயாரித்து வருகிறேன். இது இந்தியக் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காவியக் கதை. இந்த கதையை திரைப்படமாக மாற்றுவது என் நீண்ட நாள் கனவு.
இப்போது, இந்த ‘ராமாயண’ படத்திற்கு இசையமைப்பாளராக ஹான்ஸ் ஜிம்மர் பணியாற்ற இருக்கிறார். அவருடன் இந்திய இசை இயக்குநர் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைக்கிறார். ரஹ்மான் பல முக்கியமான இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்தவர். இந்த இரண்டு இசைஞர்கள் முதல்முறையாக இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பு. ஒரு ரசிகனாக, இது எனக்கான கனவு நனவாகும் தருணமாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.