தமிழில்‘லப்பர் பந்து’ படத்துக்கு பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள அடுத்த படம் ‘தண்ட காருண்யம்’. ஆதியன் ஆதிரை இயக்கத்தில் உருவான இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதுகுறித்து தினேஷ் கூறுகையில், “சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு மிகுந்த கூச்சம் இருந்தது. அதனால் கல்லூரி முடித்த பிறகும் வேலைக்குச் செல்லாமல் இருந்தேன். பல கட்ட சிரமங்களையும் போராட்டங்களையும் கடந்த பிறகே நடிகனாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிக்க ஆரம்பித்த பிறகும் அந்த கூச்சம் குறையவில்லை. கேமராவை பார்த்தாலே சிரிக்க முடியாமல் தவித்தேன். ‘குக்கூ’ படத்தில் நடித்தபின் தான் என் நடிப்பு மேம்பட்டது. வேலை என்பது வேலை, வாழ்க்கை என்பது வாழ்க்கை என்பதைக் கற்றுக்கொண்டேன்.
‘லப்பர் பந்து’ நான் மிகவும் ரசித்து செய்த படம். அந்த படத்துக்கு பிறகு சுமார் 100 கதைகளை கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றில் எதுவும் சரியாக அமையவில்லை. எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை சிரித்தபடி அமைதியாகச் சொல்லிவிடுவேன். அழுகை காட்சிகள் வேண்டாம், ஆக்ஷன் இருக்கலாம். வசனம் பேசாத கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை. சுமூகமாகவே வேலை செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதைப் பற்றி இயக்குனர்களிடம் முன்கூட்டியே சொல்வேன். எதையும் தெளிவாக ஆரம்பத்திலேயே பேசிவிடுவது நல்லது” என்றார்.