அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற வியாழக்கிழமை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி’ படத்திற்கு பிறகு த்ரிஷா மீண்டும் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், “நான் அஜித் சாரின் பெரிய ரசிகன். எந்த நேரத்திலும் யாரும் பயன்படுத்தாமல் இருக்கும் கதைகள் அல்லது ஐடியாக்களை எழுதி வைத்திருந்தேன். குறிப்பாக ‘குட் பேட் அக்லி’ எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான பயணமாக இருந்தது என்று கூறினார்.
“அஜித் சாருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவருக்கு கதை சொல்கிற தருணத்தில் எனக்குள் மிகுந்த பயம் இருந்தது. நான் சொல்கின்ற கதையை அவர் விரும்ப வேண்டுமென்ற அவசரமும், அதற்கான பதிலை எதிர்பார்ப்பதும் இருந்தது. அவர் ‘ஓகே’ சொன்னதும் அந்த கதையை ஒரு நல்ல படமாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மேலும் அதிகமாக பயமாகவே இருந்தது. உண்மையில், முழுவதும் பயத்துடனேயே இருந்தேன். அதே சமயம் எனக்கு மகிழ்ச்சியும் இருந்தது. ஆனாலும் அந்த பயமே என் உள்ளத்தை ஆட்கொண்டு இருந்தது” என்றார்.
“இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த பொறுப்பையும் சேர்த்து கொடுத்தது. எங்களுடைய படப்பிடிப்பு தளம் எப்போதும் உற்சாகமாக இருக்கும். அஜித் சார் எப்போதும் ஜாலியாகவே இருந்தார். இரவும் பகலும் உழைத்தாலும், அதை மகிழ்ச்சியாகச் செய்வதுதான் எங்கள் எண்ணம். நான் மிக அமைதியாக வேலை செய்த படமாக ‘குட் பேட் அக்லி’ தான். இப்படத்தின் கதையை கேட்டவுடன் ‘இது நல்லா இருக்கு… இதை உடனே படம் பண்ணணும்’ என சார் சொன்னார்.
கதை சொன்னதற்குப் பிறகு, அனைத்து வேலைகளும் மெதுவாக நடைபெறும் என நினைத்தேன். ஆனால் அதே இரவு படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகிய அனைவரையும் பற்றிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. அதே நேரத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சார் நேரில் அழைத்து பேசியதும் நினைவில் உள்ளது. இவ்வாறான திட்டமிடல்களுக்குப் பிறகு, வெறும் இரண்டு மாதங்களிலேயே படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துவிட்டது” என இயக்குநர் ஆதிக் கூறினார்.